நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு வைரல்...

நடிகர் ரவி மோகன் ஜீவனாம்சமாக தனக்கு மாதம் 40 லட்ச ரூபாய் தர வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆர்த்தி மனு தாக்கல் செய்த நிலையில், நடிகர் ரவி மோகனின் இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்த நிலையில், இரு தரப்பினரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, ரவி மோகன் பாடகி கெனிஷா உடன் திருமண விழாவில் பங்கேற்றதுடன் அவரை சிறந்த துணை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ரவி மோகன் தனது மனைவியை விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்து வழக்கில் நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். ஏன் விவாகரத்து வேண்டும் என்பதற்கான ரவி மோகனின் விளக்கங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேபோன்று, ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவி மோகன் மாதம் 40 லட்ச ரூபாய் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12ஆம் தேதிக்கு சென்னை 3வது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி ஒத்திவைத்தார்.இந்நிலையில், ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "NEWS INCOMING" என்ற வாசகத்துடன் தொலைபேசியில் பேசுவதை போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இது விவாகரத்து தொடர்பாக ஆர்த்தி முன்வைத்த கோரிக்கைக்கான பதிலா, அல்லது தனது திரைப்படம் தொடர்பான அறிவிப்பா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.முன்னதாக ரவி மோகனும் தானும் பிரிவதற்கு 3-வது நபரே காரணம் என ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உரிய உத்தரவு வரும் வரை அவரது மனைவியாகவே தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.