நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்து முடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட சூப்பர் சிவராஜ்குமாருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கடந்த 1974இல் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர் தற்போது வரை 125 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழில் இவர் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிவராஜ்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இருப்பினும் சிவராஜ்குமார் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் தனக்கு உடல் நலம் சரியில்லாததையும் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதையும் ஏற்கனவே உறுதி செய்தார் சிவராஜ் குமார். அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிவராஜ்குமார் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் ப்ளோரிடோவின் மியாமி இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராஜ் குமாருக்கு நேற்று (டிசம்பர் 24) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேஷ் மனோகரன், “சிவராஜ்குமாரின் உடல்நிலை குறித்து உங்களிடம் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். சிவராஜ்குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவருக்கு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, “அவருடைய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும், இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் டாக்டர்களும் எங்களுக்கு கடவுள் தான்” என்று கூறியுள்ளார்.