சினிமா விமர்சனங்கள் கூற அனைவருக்கும் உரிமை உள்ளது : நடிகர் சித்தார்த்!
நடிகர் சித்தார்த் தற்போது ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தனது 40வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் மிஸ் யூ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராஜசேகர் இயக்க 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க கேஜி வெங்கடேஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஆஷிகா ரங்கநாத், பால சரவணன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சித்தார்த்திடம் யூடியூப் சினிமா விமர்சனங்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சித்தார்த், “எங்கள் படத்தைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்குறீங்க அதனால் உங்களுடைய விமர்சனத்தை சொல்ல எந்த தடையும் இல்லை. படம் பிடித்திருக்கிறது என்றால் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று உங்களது ஸ்டைலில் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.‘மிஸ் யூ’ திரைப்படம் வேறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும். இந்த படத்தில் என்னோடு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு காதல், நட்பு, குடும்பம் என ஒரு படம் அமைந்திருக்கிறது. ஒரு நல்ல படத்துக்கு நல்ல படம் என்கிற அடையாளத்தை ஆடியன்ஸ் தான் கொடுக்க வேண்டும். ஒரு படம் வெளியாகிவிட்டால் அது எல்லாருக்கும் சொந்தமாகி விடும். டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் யார் வேண்டுமானாலும் அது குறித்து கருத்து சொல்லலாம். இதை நான் முன்பே பலமுறை கூறியிருக்கிறேன்.
‘இந்தியன் 2’ படத்தில் நடித்தற்காக என் நடிப்பை என் வீட்டில் அனைவரும் பாராட்டினார்கள். நான் தமிழ் சினிமாவில் தான் இருக்கிறேன். சென்னையில்தான் என் வீடு இருக்கிறது. இங்குதான் நான் வரி கட்டுகிறேன். வருடத்துக்கு இரண்டு படங்கள் கொடுக்கிறேன். அடுத்த வருடம் மூன்று படங்கள் வரும்” இவ்வாறு சித்தார்த் தெரிவித்தார்.
ஏற்கனவே திரையரங்க வளாகத்தில் பொதுமக்களிடம் விமர்சனம் கேட்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம், ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை தெரிவிக்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.