‘புஷ்பா 2’ குறித்த சர்ச்சை கருத்து : நடிகர் சித்தார்த் விளக்கம்
‘புஷ்பா 2’ குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் குறித்து சித்தார்த்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நமது ஊரில் கட்டிட வேலைகளுக்காக ஜேசிபியை நிறுத்தினாலும்கூட கூட்டம் கூடும். எனவே பிஹாரில் கூட்டம் கூடியது அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. பெரிய மைதானம் வைத்து நிகழ்ச்சி நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும். இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும், குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை” என நடிகர் சித்தார்த் தெரிவித்தார்.
இந்தக் கருத்து இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையவாசிகள் பலரும் அவருடைய கருத்துக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதனிடையே ‘மிஸ் யூ’ படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு சித்தார்த் வந்திருந்தார். அவரிடம் அவரது கருத்து குறித்தும், அவருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பிரச்சினையா என்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு சித்தார்த், “எனக்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ‘புஷ்பா 2’ மிகப் பெரிய வெற்றி படம். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முதல் பாகம் எங்கு பெரிய வெற்றியடைந்ததோ அங்கு பெரிய அளவில் வரவேற்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அந்தளவுக்கு திரையரங்குகளுக்கு கூட்டம் வரும் என நம்புவோம். சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நம்புவோம். அனைவருமே ஒரே கப்பலில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு படம் வெளியாகி வெற்றியடைவது என்பது 100-ல் ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.