மத்திய அமைச்சரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் & அமரன் படக்குழு
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது ரஜினி, விஜய், சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.
இதனிடையே காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காஷ்மீர் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் என பல்வேறு கேள்விகள் எழுப்பி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், கோபி நயினார் உள்ளிட்டோரும் படக்குழுவை விமர்சித்திருந்தனர். இதையடுத்து அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பை பாராட்டி இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அவரை நேரில் அழைத்து கௌரவித்தது.
Actor Mr. @Siva_Kartikeyan , Producer Mr. #Mahendran, and Director Mr. @Rajkumar_KP had the privilege of meeting the Honourable Defence Minister, Mr. @rajnathsingh , today. The Honourable Minister extended his congratulations to the Amaran team for the film's remarkable success.… pic.twitter.com/nZiqOIl40B
— Raaj Kamal Films International (@RKFI) November 29, 2024
இந்த நிலையில் சிவகார்த்தியேன், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமரன் படம் வெற்றி பெற்றது தொடர்பாக பாராட்டு தெரிவித்துள்ளார். தேசப்பற்றோடு மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை படமாக்கியதற்காகவும் நமது தேச மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படம் அமைந்ததாலும் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.