"அமரன் 100வது நாள்.." நடிகர் சிவகார்த்திகேயன் காணாளி வெளியிட்டு நெகிழ்ச்சி..

amaran

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம்  100வது நாளை எட்டியுள்ளது. 

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியன்று(அக்டோபர் 31) வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  sk

இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது ரஜினி, விஜய், சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். 

இதனிடையே காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காஷ்மீர் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் என பல்வேறு கேள்விகள் எழுப்பி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், கோபி நயினார் உள்ளிட்டோரும் படக்குழுவை விமர்சித்திருந்தனர்.


இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பை பாராட்டி இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அவரை நேரில் அழைத்து கௌரவித்தது. பின்பு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இப்படம் இந்தப் படம் கடந்த ஆண்டு பேசு பொருளாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி நூறு நாட்களை கடந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து படம் தொடங்கியது முதல் முடியும் வரை என்னென்ன முக்கியமாக நடந்ததோ அதை எடிட் செய்து சிறிய வீடியோவாக வெளியிட்டுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் மணிரத்னத்துக்கும் பின்பு சிப்பாய் விக்ரம் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்ட நிலையில் தற்போது நூறாவது நாளான இன்று முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படம் நூறு நாளை கடந்துள்ள நிலையில் விரைவில் அதற்கான விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Share this story