"பெர்லின் டூ ராஜாக்கூர்"... சொந்த ஊரில் கொட்டுக்காளி படக்குழுவினருடன் நடிகர் சூரி...!

Soori

 நடிகர் சூரி, கொட்டுக்காளி படக்குழுவினருடன் தனது சொந்த ஊரான ராஜாக்கூர் கோயில் திருவிழாவில் பங்கேற்றார்.சிவகார்த்திகேயனின் எஸ்கே (SK) புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அண்ணா பென் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’. வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ’கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின், கனடா என பல்வேறு திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெற்று சாதனை படைத்தது. மேலும், தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் போன்ற கவனிக்கத்தக்க இயக்குநர்களால் கொட்டுக்காளி திரைப்படம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


இன்னும் சில நாட்களில் கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் சூரியின் சொந்த ஊரான மதுரை அருகிலுள்ள ராஜாக்கூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், கொட்டுக்காளி படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், “உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையைக் கொண்ட கொட்டுக்காளி படத்திற்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை. மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம்!. எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது” என பதிவிட்டுள்ளார். நடிகர் சூரி தனது சொந்த ஊரில், மக்கள் முன்னிலையில் கொட்டுக்காளி படக்குழுவினரை கௌரவித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story