லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசை : நடிகர் சூரி

ஒரு நடிகனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படம் கடந்த மே 16-ம் தேதி வெளியானது. இதன் கதையை சூரி எழுத, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜன். இதில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவனும் நடித்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சூரி, “இன்று தமிழ் சினிமாவை உலக அளவில் கவனிக்க வைக்கும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ், அட்லீ இருவரும் முக்கியமானவர்கள். இந்திய அளவில் ராஜமவுலி என்றால் தமிழ் சினிமாவை இந்த இருவரும்தான் உலக அளவில் கொண்டு சென்றிருக்கிறார்கள்.லோகேஷ் கனகராஜ் என்னிடம் 2,3 கதைகளை அவருடைய தயாரிப்பில் நடிக்க கேட்டிருந்தார். நிச்சயமாக எதிர்காலத்தில் அது நடக்கும். அதே போல ஒரு நடிகனாக எனக்கும் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை. அதுவும் எதிர்காலத்தில் நடக்கும் என நினைக்கிறேன். எல்சியூ-வில் வருவது குறித்து நாம் நினைக்கலாம். அனால் கதைக்கு அது தேவைப்பட வேண்டும்” என தெரிவித்தார்.