வீர தீர சூரனில் நடிக்க "சித்தா" படம் தான் காரணம்...: நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு

suraj

வீர தீர சூரனில் நடிக்க "சித்தா" படம் தான் காரணம் என நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு தெரிவித்துள்ளார். 
 

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது. வரும் 20 ஆம் தேதி இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. 



 
இந்த நிலையில், வீர தீர சூரன் படக்குழு புரமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக நடிகர்கள் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் மற்றும் இயக்குநர் சு. அருண்குமார் ஆகியோர் நேர்காணல்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில், 
நேர்காணலில் பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, "சித்தா இயக்குநர் படமென்றதும் வீர தீர சூரனில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன். ஆனால், எனக்குத் தமிழ் சுத்தமாக வராது. முதல்நாள் படப்பிடிப்பில் சின்ன வசனம்தான் இருந்தது. அடுத்தநாளில், பக்கம் பக்கமான வசனங்கள் எனக்கு வழங்கப்பட்டதும் மாரடைப்பே வந்ததுபோல் ஆகிவிட்டது. அப்படியே, ஓடிவிடலாமா எனத் தோன்றியது. பின், எனக்கு பலரும் தமிழ் மொழிக்கான உதவியைச் செய்தனர். மேலும், சிங்கிள் ஷாட் காட்சி ஒன்றை எடுத்து முடித்ததும் இயக்குநர் அழுதார். என்னவென விசாரித்தால், இன்னொரு டேக் போலாமா என்றார். அது, சிரமமான காட்சி. ஆனாலும், அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் அக்காட்சி எடுக்கப்பட்டதும் மீண்டும் இயக்குனர் அழுதார். என்ன சார் ஆச்சு? என கேட்டால், 'சந்தோஷத்தில் அழுகிறேன்' என்றார். அப்படி, வீர தீர சூரனில் பல அனுபவங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Share this story

News Hub