ஆவேசம் பட இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா! மீண்டும் தள்ளிப்போகிறது ’வாடிவாசல்’

Surya 47

சூர்யா 47 படத்தை ரோமாஞ்சம், ஆவேசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வாடிவாசல் திரைப்படம் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.  

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ரோமாஞ்சம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜித்து மாதவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பகத் பாசிலை வைத்து ஆவேசம் திரைப்படத்தை இயக்கி அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சூர்யாவின் 47 வது திரைப்படத்தை இயக்க ஜித்து மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார். 

surya

சூர்யா தற்போது ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில்  தனது  45வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின்  புதிய திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  ஜித்து மாதவனுடன் சூர்யா ஒப்பந்தமாகியுள்ள இந்தத் திரைப்படமே அவரது 47வது படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் , வாடிவாசல் படம் மேலும்  தள்ளிப் போகிறது. ஒருவேளை வாடி வாசல் சூர்யாவின் 48வது படமாக அமையலாம் என கூறப்படுகிறது. 

ஜித்து மாதவனுடன் சூர்யா நடிக்கவுள்ளது  உறுதியான நிலையில் இதற்கான திரைக்கதை பணிகளை  மும்முரமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 

Share this story