போலி டாக்டர் பட்டம்... வடிவேலுவிற்கு விபூதி அடித்த மர்ம கும்பல் !

vadivelu

நடிகர் வடிவேலுவிற்கு அளிக்கப்பட்ட டாக்டர் பட்டம் போலி என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் வெளியான 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் மூலம் அவர் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது உதயநிதியுடன் 'மாமன்னன்', ராகவா லாரன்ஸுடன் 'சந்திரமுகி 2' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 

vadivelu

இதற்கிடையே நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் தேவா, ஈரோடு மகேஷ், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த விழாவில் வடிவேலு கலந்துக் கொள்ளாததால் வீட்டிற்கே சென்று பட்டம் வழங்கப்பட்டது. 

இதில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கொடுக்கப்பட்ட டாக்டர் பட்டம் போலி என தெரியவந்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், வடிவேலு மற்றும் தேவாவிற்கு நாங்கள் எந்த பட்டமும் கொடுக்கவில்லை. அனைத்தும் போலியானவை தெரிய வந்துள்ளதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று கூறினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story