வெறுப்புகளை எரித்து வெற்றி பெற்ற கோலிவுட் மாஸ்டர்... விஜய் பிறந்ததின சிறப்புப் பதிவு!

vijay in ghilli

Rise above Hate இந்த வாக்கியம் விஜய்க்கு நன்றாக பொருந்தும். தன்னுடைய சினிமா பயணத்தில் எண்ணிலடங்காத வெறுப்புகளை கடந்துதான் விஜய் இன்றைய வெற்றிப்படிகளை ஏறியுள்ளார். 

தமிழ் சினிமா எப்போதும் இரு பெரும் நடிகர்களுக்கு இடையேயான மோதலைச் சந்தித்து தான் வந்து கொண்டிருக்கிறது. எம்ஜஆர் சிவாஜி, ரஜினி கமல் என்ற வரிசையில் தற்போது விஜய்- அஜித் உள்ளனர். ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதில் இந்த இடத்தை அடைந்துவிடவில்லை. அதற்கு அசாத்தியமான விடா முயற்சி தேவைப்பட்டது. அதன்மூலமே அவர்கள் மக்கள் மனதை ஆட்சி செய்ய முடிந்தது. 

இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் பொழிந்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் வளர்ச்சி படிக்கட்டுகளை சற்று எட்டிப் பார்ப்போம்.

சினிமா மீது விஜய் கொண்டிருந்த அதிக ஆசை அவரை நடிகராக மாற்றியது. தனது அப்பா எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். அதையடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜய் தான் கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்தது. "இந்த மூஞ்சியை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டுமா" என்று பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த அவமானத்தை தாங்கிக் கொண்ட தனது சினிமா கேரியரில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். ராஜாவின் பார்வையிலே, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் கதாநாயகனாக பதிய ஆரம்பித்தார் விஜய்.  

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பூவே உனக்காக' திரைப்படம் தான் அவரது சினிமா கேரியரைத் திருப்பிப் போட்டது. 1996-ம் ஆண்டு தீபாவளிக்கு பல படங்களுக்கு மத்தியில் வெளியான அப்படம் மற்ற படங்களை பின்னுக்குத் தள்ளி 350 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

தான் காதலித்த பெண் மற்றொருவரைக் காதலிக்கிறார் என்று தெரிந்தும் அவரது ஆசையை நிறைவேற்ற அவரது ஊருக்கு சென்று குடும்பங்களை சேர்த்து வைக்கும் ஒரு தலை காதலராக நடித்து குடும்ப ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். 

அதையடுத்து  மாண்புமிகு மாணவன் படமும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. லவ் டுடே, ஒன்ஸ் மோர் என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்த விஜய்க்கு காதலுக்கு மரியாதை பிளாக்பஸ்டர் ஹிட் வெற்றி கொடுத்தது. 

பின்னர் பிரியமுடன், நிலவே வா படங்களில் நடித்த விஜய் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் குட்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களை உருகச் செய்தார். அந்தப் படத்தில் விஜய் தன் அம்மா இறந்த செய்தி கேட்டு கதறும் காட்சியில் மக்களும் துடித்தனர். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் படங்களில் இன்றளவும் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு தனி இடம் உண்டு. இவ்வாறு காதல் மன்னனாக விஜய் ரசிகர் மனதில் ஆட்சி செய்து வந்தார்.

2000-ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில்விஜய் நடித்த குஷி திரைப்படம் மீண்டும் விஜய்க்கு சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தது. விஜயின்  துறுதுறு நடிப்பு, நடனம், காமெடி என அனைத்தையும் ஒரே படத்தில் ஒரு சேர கொடுத்து வெற்றி பெற்றார். அந்தப் படம் விஜயின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. 

பிரியமானவளே, ஃப்ரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான், தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதிய கீதை என காதல் படங்களாக நடித்து வந்த விஜய்க்கு திருமலை திரைப்படம் தான் ஆக்ஷன் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

பின்னர் தரணி இயக்கத்தில் நடித்த 'கில்லி' மெகா ஹிட் வெற்றி பெற்று விஜய் கமர்சியல் ஹீரோவாக மக்கள் மனதில் பதியச் செய்தது. இந்தப் படத்திலிருந்து விஜய் தங்கை சென்டிமென்டை கையில் எடுத்தார். அவரது படங்களில் கட்டாயம் தங்கை அல்லது அம்மா பாசம் இடம் பெற்றிருக்கும். இது விஜய் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸை அதிகப்படுத்தியது. 

சச்சின், சிவகாசி ஆதி உள்ளிட்ட சில தோல்விப் படங்கள் இடையில் கொடுத்த விஜய்க்கு பிரபுதேவா இயக்கத்தில் நடித்த போக்கிரி மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்தது. பின்னர் மீண்டும் அவரது சினிமா கேரியரில் சில சறுக்கல் ஏற்பட்டது. குருவி, வில்லு போன்ற படங்கள் விஜய்க்கு தோல்வி படமாக அமையவே வேட்டைக்காரன் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. பின்னர் மீண்டும் சுறா, காவலன், வேலாயுதம் என சில தோல்விப் படங்கள் விஜய்யின் மார்க்கெட் அவ்வளவு தான் என்று சொல்லும் அளவிற்கு தோல்வி படங்களாக அமைந்தது.

அதையடுத்து ஆக்சன் ஹீரோவாக இல்லாமல் மீண்டும் கல்லூரி மாணவனாக களமிறங்கிய நண்பன் திரைப்படம் அவருக்கு ஒரு ஹிட் கொடுத்தது. ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல் முழுக்க காமெடி கதாபாத்திரத்தைக் கையில் எடுத்து மக்களை வியக்கசி செய்திருந்தார். அதையடுத்து விஜய் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'துப்பாக்கி' திரைப்படம் தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக அமைந்தது. தமிழ் சினிமாவின் டிரெண்டை மாற்றிய படங்களில் துப்பாக்கி படத்திற்கு முக்கிய இடமுண்டு. கேப்டன் ஜெகதீஸாக வந்து நம் அனைவரையும் மனதில் நீங்கா இடம் பிடித்தார் விஜய்.

அடுத்து தலைவா படத்தில் அவருக்கு கொஞ்சம் அரசியல் ஆசை எட்டிப் பார்க்கவே 'டைம் டு லீட்' என்ற வாசகத்தையும் அதில் இடம்பெறச் செய்தனர். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜில்லா திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெறவே மீண்டும் ஏஆர் முருகதாஸுடன் இணைந்த கத்தி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்தது.

விஜய் தற்போது பெரிய ஸ்டார் நடிகர் என்பதால் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. தெறி, மெர்சல், , பிகில் என்ற அட்லீ விஜயின் ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்தார். இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காண்பித்த விஜய் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் படத்தில் நடித்தார். லோகேஷும் அதைக் காப்பாற்றினார். விஜயை புதிய பரிணாமத்தில் காண்பித்திருந்தார். மாஸ்டர் படமும் ஹிட் ஆனது. 

என்னதான் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் மக்கள் அவ்வளவு எளிதில் யாரையும் தங்கள் பேவரைட்  நடிகராக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் விஜய் தனது அயராத உழைப்பின் மூலமும் விடாமுயற்சி மூலமும் இந்த வெற்றியை அடைந்துள்ளார். Ignore Negativity என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து ஸ்டெப் மேல் ஸ்டெப் போட்டு மக்கள் மனதை வென்றுள்ளார் விஜய்.

காமெடி ஆக்சன் நடனம் என அனைத்திலும் திறமை பெற்ற விஜய் இந்தியாவின் சிறந்த கமர்சியல் ஹீரோக்களில் ஒருவராக அறியப்படுகிறார். 47 வயதான போதிலும் தனது உடலை பிட்டாக வைத்து வரும் விஜய் டெடிகேஷன் என்ற வார்த்தைக்கு மிகவும் சரியான எடுத்துக்காட்டாக அமைவார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இனிவரும் காலங்களிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் படங்களை வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்.

மக்கள் மனதை ஆட்சி செய்யும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

Share this story