"வெற்றிமாறன் எனும் பல்கலைக்கழகத்தில் நான் ஒரு மாணவன் " - நடிகர் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி!

vjs

வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன் என விடுதலை பாகம் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசினார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி விடுதலை பாகம் 2 வரும் டிச 20 தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.இந்நிலையில் விடுதலை 2 ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, கென் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், "ராஜா இருக்கும் காலத்தில் அவர் இசையை ரசிப்பதே பெரும் வரமாக நினைக்கின்றேன். அவரோடு கேள்வி கேட்பது, அவரோடு பழகுவது, அவரோடு பேசுவது, அவர் படத்தில் வேலை பார்த்தது, இப்படி பல வரங்களை வாங்கி வந்த பெரும் பாக்கியவானாக கருதுகிறேன்.முதன் முதலில் தன் காதலியின் முகத்தை எதிரில் அமர்ந்து பார்ப்பது போல் இளையராஜா பேசும் பொழுது அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இசை மட்டுமல்லாமல் அவர் பேச்சிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.

விடுதலை 2 பற்றி பேச வேண்டும் என்றால் வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக் கூடிய படம். வெற்றிமாறன் விடுதலை படத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம் என்பது தான் எதார்த்தம். வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு இயக்குநர் என்ன எழுதுகிறாரோ அதை முடிந்த அளவு புரிந்து நடிக்க முயற்சி செய்வேன். ஆனால், வெற்றிமாறன் எழுதிய வசனங்களை வீட்டிற்கு சென்று அதை நான்கு பேருடன் விவாதம் செய்துகொள்ளும் அளவிற்கு எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. விடுதலை திரைப்படத்தை பொறுத்தவரை வெற்றிமாறன் தான் வாத்தியார். அவருடன் இருந்து கற்றுக் கொண்ட மாணவனாக என்னை நான் நினைக்கிறேன் என மேடையில் விஜய்சேதுபதி பேசினார்.

 
 

Share this story