மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்... குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் !

நடிகர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் மனோபாலா. 69 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கல்லீரல் செயலிழந்ததால் இன்று காலை மரணமடைந்தார்.
நடிகர் மனோபாலாவின் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், ஆர்யா, இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைத்தளம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரான விஜய், மனோபாலாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது மனோபாலாவின் மனைவி மற்றும் மகனுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதற்கிடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் விஜய்யுடன் மனோபாலா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.