நடிகர் விஜய் திடீர் மகாராஷ்டிரா பயணம்.. என்ன காரணம்..?
சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பயணித்து வருகிறார் விஜய். திரைப்படத்தை பொறுத்தவரை அவர் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.
அரசியல் பொறுத்தவரை த.வெ.க. என்ற கட்சியை நடத்தி வரும் அவர், சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ஆம் விக்கிரவாண்டியில் நடத்தவுள்ளார். இந்த மாநாட்டிற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் நேற்று அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில் விஜய், மகாராஷ்டிராவிலுள்ள ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டதாகவும் அவருடன் இணைந்து புஸ்ஸி ஆனந்தும் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு புஸ்ஸி ஆனந்த் கடந்த ஏப்ரல் மாதம் விஜய் சாய் பாபா கோயிலில் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு நீக்கியிருந்தார். அந்த புகைப்படம் அப்போது வைரலாகி பேசுபொருளாக மாறியது. அந்த புகைப்படம் குறித்து விஜய்யின் தாய் ஷோபா அளித்திருந்த பேட்டியில், “நான்தான் கொரட்டூரிலுள்ள எங்களின் சொந்த இடத்தில் சாய் பாபா கோயில் கட்டவேண்டும் என்ற ஆசையை விஜய்யிடம் தெரிவித்தேன். அதனால்தான் அவர் கட்டிக்கொடுத்தார்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.