‘பார்க்கிங்’ இயக்குநர் உடன் இணையும் நடிகர் விக்ரம்..!
நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பார்க்கிங்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சுதன் மற்றும் சினிஷ் இணைந்து தயாரித்திருந்தார்கள். இதற்குப் பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவருடைய கதையில் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ராம்குமாரின் கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சம்பளம், தேதிகள் குறித்த இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இதனை டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. ‘வீர தீர சூரன்’ படத்தின் டப்பிங் பணிகள் உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு, ராம்குமார் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.