விரைவில் பிரம்மாண்டமாக நடிகர் சங்கக் கட்டிடம் திறப்பு : நடிகர் விஷால் உறுதி

தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடிகர் சங்கக் கட்டிடம் அமையும் என்று விஷால் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.விஷாலுக்கு உடல்நிலை சரியானவுடன், ‘மதகஜராஜா’ வெளியான திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படத்தினை கண்டுகழித்தார். அதனைத் தொடர்ந்து தி.நகரில் நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் பலரும் விஷாலிடம் நலம் விசாரித்தார்கள். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால், “இன்னும் 4 மாதத்தில் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் வகையில் கட்டிடம் ஒன்று வரப்போகிறது. இங்கு வரும் ஆடிட்டோரியம் மிகச்சிறந்ததாக அமையப் போகிறது. இந்தக் கட்டிடம் இத்தனை ஆண்டுகள் கழித்து வரப்போகிறது என்றால் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.
கடவுள் ஒரு வழி காட்டினால் தான் அதனை செய்ய முடியும். கடவுளின் ஆசிர்வாதத்தால் விரைவில் வர இருக்கிறது. சென்னைக்கு வரும்போது எப்படி எம்.ஜி.ஆர் சமாதி பார்க்க ஆசைப்படுவார்களோ, அதே போன்று நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்த்துவிட்டு போவோம் என்ற உணர்வு வரும் வகையில் இந்தக் கட்டிடம் அமையும்” என்று தெரிவித்துள்ளார் விஷால். இடையே சில காலம் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது விரைவில் பணிகளை முடிக்க மிக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.