பிரதமர் மோடிக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்த நடிகர் விஷால்...

Vishal

கொல்கத்தாவிலுள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போஸீஸ் விசாரணை மேற்கொண்டபோது சஞ்சய் ராய் என்பவரை கைது  செய்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு மருத்துவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடித்தி வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து  ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐ அதிகாரிகளிடம் போலீஸார் ஒப்படைக்க, அவரின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றர். அதோடு மட்டுமில்லாமல் சஞ்சய் வசிஷ்ட்,  அருணவா தத்தா, சவுத்ரி, ரீனா தாஸ், அபூர்ச பிஸ்வால் மற்றும் மோலி பானர்ஜி ஆகிய 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சமன் அனுப்பியுள்ளது. 

நாடு முழுவதும் இந்த கொடூர சம்பவத்திற்கு நீதி கேட்டு பலரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த சம்பவம் நடந்த மருத்துவமனை அருகே பலரும் கூடி நீதிகேட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பல திரைப்பிரபலங்கள் இச்சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரித்திகா சிங், ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் மிகவும் நேர்மையான மருத்துவர்களில் ஒருவராகவும் உங்கள் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட நல்ல மருத்துவரை இழந்தது துயரமான ஒன்று. உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் எப்பொழுதுமே நிறுத்தமாட்டார்கள். உயர் அதிகாரிகளை நான் குறை கூறவில்லை. ஆனால், பெண்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பாதுகாப்பை, குறிப்பாக உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் அதிகம் தேவைப்படுகிறது. மோடி ஜி தயவு செய்து இதை கவனியுங்கள், நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இது போன்ற பல பாலியல் வன்கொடுமைகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் சமீபத்தில் தொடர்ந்து பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this story