நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்... நிர்வாகிகள் அறிவிப்பு !
நடிகர் விஷ்ணு விஷால் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளார்.
தமிழில் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'எப்.ஐ.ஆர்', கட்டா 'குஸ்தி' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'லால் சலாம்', மோகன்தாஸ், ஆர்யன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி மூன்று திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் விஷ்ணு விஷால் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர் மன்றத்தை ஆரம்பித்துள்ளார். இது குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.
இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம். இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.