நடிகர் யாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல் : ’டாக்சிக்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!
நடிகர் யாஷ் 39வது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்சிக் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு டாக்சிக் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கேஜிஎஃப்' (KGF) திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமானார். கன்னட சினிமாவின் வளர்ச்சிக்கு 'கேஜிஎஃப்' திரைப்படம் முக்கிய பங்கு வகித்தது. அப்படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது.
நடிகர் யாஷ் ஆஜானுபாகுவான உடல் மொழியுடன், மாஸ் வசனங்கள் பேசி ரசிகர்களை கவர்ந்தார். 'கேஜிஎஃப்' இரண்டு பாகங்களின் வெற்றிக்கு ரவி பஸ்ரூரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும் உறுதுணையாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக யாஷ் நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. பல இயக்குநர்களிடம் யாஷ் கதை கேட்டதாக கூறப்படும் நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் (Toxic) திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
மலையாள இயக்குநரான கீது மோகன்தாஸ் தமிழில் 'தென்காசிப்பட்டினம்', மாதவன் நடித்த 'நலதமயந்தி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் மலையாளத்தில் moothon என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்நிலையில் மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் டாக்சிக் படத்தில் யாஷுடன், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் யாஷின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு Toxic birthday peek என்ற ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் யாஷ் ஸ்டைலிஷான கோட் சூட் அணிந்து கொண்டு, வாயில் சிகாருடன் அழகான பெண்கள் இருக்கும் பாருக்குள் செல்கிறார். டாக்சிக் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதே தயாரிப்பு நிறுவனம் விஜய் நடித்து வரும் ’தளபதி 69’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் யாஷ் தனது பிறந்தநாளை பொது இடங்களில் ஒன்று கூடி கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த வருடம் யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கட் அவுட்டில் இருந்து கீழே விழுந்து மூன்று ரசிகர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என யாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.