ராமாயண கேரக்டராக எந்தெந்த நடிகர் நடிக்கின்றனர் தெரியுமா ?
தசரத மன்னராக அருண்கோவில் இடம்பெறும் போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ராமர் கேரக்டருடன் அடையாளம் காணப்படும் அருண்கோவிலுக்கு இது முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது. ராமரின் தந்தையும், அயோத்தி மன்னருமான தசரதராக அருண்கோவில் காட்சியளிக்கிறார். இரண்டு பாகங்கள் கொண்ட இப்படத்தின் முதல் பாகம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ராமாயணத்துடன் மிகவும் நெருக்கமான பிணைப்பு கொண்டுள்ள அருண்கோவில், தற்போது அதே காவியத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, ‘ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்தவர், தற்போது அயோத்தி மன்னர் தசரதராக, மீண்டும் ராமாயண உலகிற்கு அருண்கோவில் திரும்புகிறார்’ என்று பதிவிட்டுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், கைகேயியாக லாரா தத்தா, கைகேசியாக ஷோபனா, ஹனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே, மண்டோதரியாக காஜல் அகர்வால், சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் திரைகளில் படம் வெளியாகிறது.

