'ஆன்ட்டி' ரோல் என கூறிய நடிகை மன்னிப்பு கேட்டார் ... நடிகை சிம்ரன்

தன்னை 'ஆன்ட்டி' ரோலில் நடிப்பதாக கூறிய நடிகை, அதன் பின் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். அவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.கடந்த மாதம் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டு சிம்ரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “என்னுடன் நடித்த சக நடிகை ஒருவரிடம் ஏன் இந்தப் படத்தில் நடித்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 'உங்களைப் போல 'ஆன்ட்டி' கதாபாத்திரங்களில் நடிப்பதை விட இது சிறந்தது' என்று பதிலளித்தார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட புரிதல் இல்லாத பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. 'டப்பா' கதாபாத்திரங்களில் நடிப்பதை விட 'ஆன்ட்டி' கதாபாத்திரங்களில் நடிப்பதில் தவறில்லை,” என்று சிம்ரன் பேசியிருந்தார்.
சிம்ரன் குறிப்பிட்ட அந்த சக நடிகை யார் என்ற சர்ச்சை எழுந்தது. 'டப்பா' கதாபாத்திரங்கள் என்று அவர் கூறியிருந்ததால் 'டப்பா கார்டெல்' என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்த ஜோதிகா தான் அது என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்திருந்தார்கள்.இதனிடையே, தற்போது சிம்ரன் அளித்த ஒரு பேட்டியில், 'அந்த நடிகை என்னிடம் மன்னிப்பு கேட்டார். என்னை காயப்படுத்தும் நோக்கத்தில் சொல்லவில்லை என்றார். ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல் மக்கள் எதையெதையோ கற்பனையாகக் கூறுகிறார்கள்,” என்று பேசியிருக்கிறார் சிம்ரன்.
அதோடு, ''டப்பா கார்டெல்' வெப்சீரிஸ்னு நினைக்கிறேன், அதைப் பார்த்தேன் நல்லா இருந்தது. நான் அந்த மேடையில பேசியது கரெக்டா போய் ரீச் ஆச்சி. அந்த மேடை எனக்காக இருந்தது. தேவைப்பட்டுச்சி பேசினேன். வதந்தியைப் பரப்பணும்னு நினைக்கல. சில விஷயங்களை புறக்கணிச்சிட்டே இருக்கக் கூடாது, நம்மள தப்பா நினைச்சிடுவாங்க,” என்றும் பதிலளித்துள்ளார்.