திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜோதிகா சுவாமி தரிசனம்

jyo

பிரபல நடிகை ஜோதிகா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.  நடிகை ஜோதிகா தற்போது தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். ப்ரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் திரைப்படம் ’Doli saja ke rakhna’ என்ற பாலிவுட் திரைப்படம் மூலம் 1997ஆம் ஆண்டில் ஜோதிகா அறிமுகமானார்.  

ஜோதிகா தமிழில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் தமிழ் படத்திற்காக ஃபிலிம் பேர் விருது வென்ற ஜோதிகா, அதற்கு பின்பு ’டும் டும் டும்’, ’குஷி’, ’பூவெல்லாம் உன் வாசம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான சந்திரமுகி, மொழி ஆகிய படங்களில் அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.


நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, பேரழகன், சில்லுனு ஒரு காதல், மாயாவி ஆகிய படங்களில் நடித்தார். சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.jyo

அப்படம் வெற்றி பெற பிறகு காற்றின் மொழி, ராட்சசி, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’கங்குவா’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்நிலையில் சூர்யா, ஜோதிகா தம்பதி சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் மூகாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகை ஜோதிகா இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை ஏழுமலையான் கோயில் ஸ்ரீவாரி தரிசனத்தில் பங்கேற்றார். சுவாமி தரிசனம் முடிந்த பின் கோயிலில் இருந்து ஜோதிகா வெளியே வந்த போது ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் ரசிகர்கள் வெங்கடாஜலபதி புகைப்படத்தை ஜோதிகாவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

Share this story