டெக் த்ரில்லர் படத்தில் கீர்த்தி சுரேஷ்.. புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு !
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் அவர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து தமிழில் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கண்ணிவெடி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்குகிறார். அவர் இயக்குனர்கள் ராம் மற்றும் ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து விஜே ரக்ஷன், அஜய் கோஷ், நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘டாணாக்காரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி மாதேஷ் மாணிக்கம் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய இயக்குனர் கணேஷ் ராஜ், ‘கண்ணிவெடி’ படம் பெண்களை மையப்படுத்தி உருவாகும் டெக் த்ரில்லர் கதைக்களம் கொண்டது. இந்த படத்தில் ஊடகவியல் மாணவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அவர் ஊடகவியலாளராக மாற, ஒரு விஷயத்தை கண்டுபிடிக்க நினைத்து பிரச்சனைக்குள் சிக்கிக் கொள்கிறார். இது அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் படமாக இருக்கும். இந்த படத்தில் விசாரணை புகழ் அஜய் கோஷ் மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷின் தோழனாக ரக்ஷன் நடிக்கிறார்.
வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். அதற்குள் இசையமைப்பாளர் மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வை இறுதி செய்துவிடுவோம். இந்த படம் நேரடி தமிழ் படமாக உருவாகிறது. படப்பிடிப்பு நிறைவுபெற்றவுடன் மற்ற மொழிகளில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் முடிவு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.