கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்...!
“ஆண்டனி தட்டிலை திருமணம் செய்தது தான் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த கையுடன் ‘பேபி ஜான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். தற்போது ஆண்டனி தட்டிலுடன் காதல் மலர்ந்தது எப்படி என்று பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அதில் கீர்த்தி சுரேஷ் “ஆர்குட் காலத்திலேயே அவரை தெரியும். அப்போது நான் தான் முன்னெடுத்து அவருடன் பேசத் தொடங்கினேன். ஒரு மாத காலத்துக்கு சாட்டிங் செய்தோம். பின்னர் ஓர் உணவகத்தில் சந்தித்தோம். அப்போது என் குடும்பத்துடன் இருந்ததால் அவரிடம் பேச முடியவில்லை. எனவே அவரைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு வந்தேன்.
பின்பு, “உனக்கு தைரியம் இருந்தால் நீ என்னிடம் காதலைச் சொல் பார்ப்போம்” என்று சொன்னேன். முதன் முதலில், 2010-ம் ஆண்டு என்னைக் காதலிப்பதாகக் கூறினார். ஆனால், 2016-ம் ஆண்டில் தான் எங்களுடைய காதல் தீவிரமடைந்தது. அவர் எனக்கு உறுதி அளித்ததன் அடையாளமாகப் பரிசளித்த மோதிரத்தை திருமணம் முடியும்வரை நான் கழட்டவில்லை. அதை எனது படங்களில் கூட என் விரலினில் நீங்கள் பார்க்கலாம். இது ஒரு அழகிய கனவினைப் போல உள்ளது ஏனென்றால் நாங்கள் வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொள்வது போல கெட்ட கனவுகள் எல்லாம் கண்டோம். இப்போது என் இதயம் நிறைந்துள்ளது. திருமணம், எங்களுக்கு உணர்ச்சிமிக்க தருணமாக இருந்தது.
அவர் எனக்கு ஏழு ஆண்டுகள் மூத்தவர். கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்கள் காதல், ஆறு ஆண்டுகள் இப்படி தேசம் விட்டு தேசம் தொலைதூரத்திலிருந்தே பிணைப்புடன் இருந்தது. கரோனா காலத்திலிருந்து தான் நாங்கள் சேர்ந்து வாழத் தொடங்கினோம். என் நடிப்பு வாழ்க்கைக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். என்னை திருமணம் செய்து கொள்வது இந்த மனிதரின் அதிர்ஷ்டம் என்று யாராவது நினைத்தால், உண்மையில், அவரைத் திருமணம் செய்தது தான் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்.” என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.