தொடர் திரைப்படங்கள் தோல்வி... புது ரூட்டில் லேடி சூப்பர் ஸ்டார் !
தனது திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் புதிய ரூட்டில் பயணிக்க நடிகை நயன்தாரா முடிவு செய்துள்ளார்.
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘ஜவான்‘ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையே சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான ‘காத்துவாக்கு ரெண்டு காதல்’, ‘O2’, கனெக்ட் என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தன.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் மீண்டும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க நயன்தாரா முடிவு செய்துள்ளார். அதன்படி ஏற்கனவே அகமது - ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன் 2’ படத்திலும் நடிக்கவுள்ளாராம். இதுதவிர புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.