கேரவன்களில் ரகசிய கேமரா : நடிகை ராதிகா பகீர் குற்றச்சாட்டு!

Radhika


ஹேமா கமிட்டி அறிக்கை பேசு பொருளாகியுள்ள நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட முதலைமைச்சர்கள், அரசியல்வாதிகள் பற்றி எனக்கு தெரியும், நேராக பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.  மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பலர் மீது மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் தலைவர், நடிகர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்தனர். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக பல்வேறு திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகை ராதிகா சரத்குமார் சினிமாத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து மலையாளத்தில் உள்ள தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சினிமாத்துறையில் பாலியல் பிரச்னை குறித்து மிகவும் தாமதமாக பேசப்படுகிறது.

நான் இந்த சினிமாத்துறையில் 46 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். என்னிடமும் சில பேர் தவறாக நடக்க முயன்றுள்ளனர். நாம் உறுதியாக No சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு ஆண் கூட வாய் திறக்கவில்லை. பெண்கள் தான் இந்த பிரச்னையை சுமக்க வேண்டும். என்னை ஒரு தைரியமாக பெண்ணாக பார்க்கின்றனர். என்னிடம் பல பெண்கள் இரவு நேரத்தில் உதவி கேட்டுள்ளனர். இது மலையாளத்தில் மட்டும் இல்லை, அனைத்து மொழியிலும் இந்த பிரச்னை உள்ளது" என்றார்.

கேரளாவில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டது உண்டா என கேட்டதற்கு, “நான் ஒரு நாள் இரவில் கேரளாவில் நடந்து சென்ற போது, ஒரு சிலர் வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தனர். அது என்ன என்று பார்த்த போது, அவர்கள் நடிகைகள் கேரவனில் ரகசிய கேமராவை வைத்து பெண்களை ஆபாசமாக படம்பிடித்து உள்ளனர் என்பது தெரியவந்தது. அதன் பிறகு கேரவனுக்குள் செல்ல பயமாக இருந்தது” என்றார்.

நடிகை  ஊர்வசி மலையாளத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்னை இல்லை என கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “அவர் மலையாள சினிமாத்துறையைச் சேர்ந்தவர். எனக்கு அவர் நல்ல நண்பர், ஆனால் இந்த விஷயத்தில் அவரது கருத்தை ஏற்க மாட்டேன். மலையாளத்தில் மட்டுமல்ல, அனைத்து சினிமாத்துறையிலும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடக்கிறது” என்றார்.

பாலியல் புகார் சுமத்தப்பட்ட நடிகர் திலீப் உடன் நீங்கள் நடித்தது குறித்து கேட்டதற்கு, "திலீப் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. எனது சினிமாத் துறையில் பல பேர் மீது பல பெரிய வழக்குகள் உள்ளது. பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட முதலைமைச்சர்கள், அரசியல்வாதிகள் பற்றி எனக்கு தெரியும், நேராக பார்த்துள்ளேன். ஆனாலும் அவர்களுடன் எனக்கு பேச்சுவார்த்தை உள்ளது. எனக்கு மலையாள சினிமாத்துறையில் அனைவரையும் தெரியும்" என்றார்.
 

Share this story