மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்த மர்ம நபர்கள் - நடிகை ரோஜா வேதனை !

எனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுகின்றனர் என நடிகை ரோஜா வேதனை தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ரோஜா. ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இதையடுத்து தன்னை அறிமுக செய்த இயக்குனரான ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அன்சுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு ரோஜா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான அவர், தற்போது அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதற்கிடையே ரோஜா மூத்த மகளான அன்சு மாலிகா, தமிழ் சினிமா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோஜாவின் மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டனர். இதனால் ரோஜா அதிர்ச்சியடைந்த நிலையில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், தனது மகள் புகைப்படத்தை மார்பிங் செய்து மர்ம நபர்கள் வெளியிட்டுள்ளனர். நான் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் என் குடும்பத்தினர் மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்புவது வருத்தம் அளிக்கிறது. இதனால் என் மகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் பிரபலங்களுக்கு நடப்பது சகஜம் தான் என்று கூறியுள்ளார்.