சமரசமற்ற படைப்பாக உருவாகியுள்ள சாய் பல்லவியின் ‘கார்கி’... திரை விமர்சனம் !
தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சமரசமற்ற படைப்பு வரும், அப்படி வந்திருக்கும் படம்தான் ; கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள 'கார்கி'.
சென்னையில் அபார்ட்மெண்டில் சிறுமிக்கு நடந்த வன்கொடுமை சம்பவத்தை பின்னணியாக வைத்து கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார். பொதுவாக ஒரு குற்றச் சம்பவம் நடக்கும் போது,பாதிக்கப் பட்டவரின் சைடிலிருந்துதான் கதை பண்ணுவார்கள்… இதில் குற்றவாளியின் குடும்பம் படும் அவமானங்கள்,ஒரே நாளில் இந்த சமூகம் பார்க்கிற பார்வை ; துயரங்கள் என வேறொரு கோணத்தில் அணுகியிருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
சட்டமும்,சமூகமும் குற்றவாளி என்று தீர்மானித்த தன் அப்பாவை குற்றவாளி இல்லை என்று ஒரு சாதாரண மனுசியான சாய் பல்லவி போராடுவதுதான் மொத்தப் படமும். அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் அட்வகேட் காளி வெங்கட் தொடங்கி, ஜெயபிரகாஷ்,'சித்தப்பு' சரவணன், லிவிங்ஸ்டன், ஆர்.எஸ்.சிவாஜி என படத்தில் வர்ற அத்தனை கேரக்டர்களும் கதைக்கு அவ்வளவு பொருத்தம்.அதுவும் நீதிபதியாக வரும் திருநங்கை கேரக்டர் படத்தின் ஹைலைட்! அவர் பேசுகிற டயலாக்குக்கு தியேட்டரில் 'அப்லாஸ்' அள்ளுது.
'ரவுடி பேபி'யாக ரகளை பண்ணிய சாய் பல்லவி, இப்படியான கேரக்டரை ஒப்புக்கொண்டு நடித்திருப்பது ; எந்த நடிகைக்கும் வராத துணிச்சல்! அவார்டு நிச்சயம். காளி வெங்கட், திக்குவாய்… இயல்பான கூச்சசுபாவம் எல்லாத்தையும் மீறி அவர் வாதத்தை முன் வைக்கிற விதம் என எறங்கி அடித்திருக்கிறார். சாய் பல்லவிக்கும், காளி வெங்கட்டுக்கும் அவர்களது கேரியரில் மிக முக்கியமான படம் இது.
ஸ்க்ரீன் ப்ளே, கேமரா ஒர்க், பேக்ரவுண்ட் ஸ்கோர் மூன்றும் படத்துக்கு மிகப் பெரிய பலம். விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிப்பதுபோல் போகும் படத்தில், இவர்தான் குற்றவாளி என அடையாளப் படுத்தும்போது 'அடப்பாவி!' என்று அதிரவைக்கும் க்ளைமாக்ஸ்! சின்ன குறைகளைக் கூட தேடிப்பிடிக்க முடியாத அளவுக்கு மொத்த டீமும் உழைத்திருக்கிறார்கள்!
'ஜெய் பீம்' படத்தைக் கொடுத்த சூர்யாவின் டூ டி நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட முன் வந்ததுக்கு பாராட்டுக்கள்.இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்துவிடுங்கள்… டோண்ட் மிஸ் இட்…
- V.K.சுந்தர்