பெயருக்கு பின்னால் சாதி அடையாளம் எதற்கு ? - விளக்கமளித்த 'வாத்தி' பட நடிகை

பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுவது குறித்து பிரபல நடிகை சம்யுக்தா விளக்கம் அளித்துள்ளார்.
மலையாளத்தில் ‘பாப்கார்ன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ஜூலை காற்றில், களரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருகிறது.
தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷ் வாத்தியராக நடித்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்துள்ள முதல் தெலுங்கு படம் இதுவாகும். இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், நான் பாலாக்காட்டை சேர்ந்த பெண் என்றாலும், தமிழில் நன்றாக பேசுவேன். எனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ்தான். பெயருக்கு பின்னால் உள்ள சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் 'வாத்தி' உள்ளிட்ட எந்த படத்திலும் என் பெயருக்கு பின்னால் 'மேனன்' என்பது இருக்காது. ஏற்கனவே அதை நீக்க சொல்லிவிட்டேன். பத்திரிக்கையாளர்களும் என்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.