அஜித்துடன் மீண்டும் இணைந்த அனுபவம் குறித்து நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி...!

குட் பேட் அக்லி படத்தில் அஜித் உடன் இணைந்து நடித்தது குறித்து நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 10ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து உணர்ச்சி பொங்க ரிவ்யூ கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை வெளியான அஜித் படங்களில் இப்படம் தான் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அஜித்துடன் நடித்தது குறித்தும் நெகிழ்ச்சியுடன் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் பதிவிட்டிருந்த நிலையில் சிம்ரனும் பதிவிட்டுள்ளார்.
Walked in for a cameo, and walked out with all your love💫 Reuniting with #Ajith sir in #GoodBadUgly was a blast🔥 Thank you @Adhikravi & the entire #GBU crew for the fun ride ✨#HeartIsFull #OverwhelmedWithLove pic.twitter.com/Tr4qM2hg2z
— Simran (@SimranbaggaOffc) April 11, 2025
அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “கேமியோ ரோலிற்காக உள்ளே வந்தேன், ஆனால் அனைவரது அன்பையும் பெற்று வெளியே வந்திருக்கிறேன். அஜித்துடன் மீண்டும் இணைந்தது ஒரு அற்புதமான அனுபவம். ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் கலகலப்பான அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.