கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம் : நடிகை தமன்னா மறுப்பு

கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக்க புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. முன்னணி சினிமா நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதும் தெரியவந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தமன்னாவிற்கு 25 லட்சம் ரூபாயும், காஜல் அகர்வாலுக்கு 18 லட்சம் ரூபாயும் அனுப்பப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த, அவர்களுக்கு சம்மன் அனுப்ப புதுச்சேரி போலீசார் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
இத்தகவலை தமன்னா தற்போது மறுத்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அவர் கொடுத்த அறிவிப்பில், “கிரிப்டோ கரன்சி மோசடியில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஒரு வதந்தி பரப்பப்படுவது என் கவனத்திற்கு வந்தது. இது போன்ற போலியான மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என என் ஊடக நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக எனது குழு நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.