'சூர்யா 45' படத்தில் நடிகை த்ரிஷா.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு...!

trisha

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சூர்யா 45’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

’சூர்யா 45’ திரைப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யா, த்ரிஷா இருவரும் மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து, ஆறு ஆகிய மூன்று படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக ஆறு திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளியானது. இதனைத்தொடர்ந்து கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா, த்ரிஷா எவர்கிரீன் ஜோடி இணைந்து நடிக்கின்றனர். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



த்ரிஷா கதாநாயகியாக அமீர் இயக்கிய ’மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து 20 வருடங்களுக்கு பிறகு சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ‘சூர்யா 45’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 20 வயதான இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த ஆண்டு மிகவும் பிரபலமடைந்த 'ஆசை கூட', 'கட்சி சேர' உள்ளிட்ட ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதுமட்டுமின்றி ’சூர்யா 45’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினி, கமல்ஹாசன், விஜய் ஆகியோருக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள நிலையில், சூர்யாவுக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் அது வித்தியாசமான கூட்டணியாக இருக்கும் என்பது ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.

Share this story