அதிரடி காட்டிய நீதிமன்றம்.. பவ்யமாக ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் !
கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. ‘துருவங்கள் 16’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘நோட்டா’, ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஈசிஆர் சாலையில் தனது தோழிகளுடன் இரவு விருந்து முடித்துவிட்டு காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மாமல்லபுரம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா, அதிர்ஷ்ட வசமாக சிகிச்சை பெற்று உயிர் தப்பிய நிலையில் அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இரண்டும் முறை யாஷிகாவிற்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. அதை பொருட்படுத்தாமல் இருந்த யாஷிகாவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று இன்று யாஷிகா ஆஜரானார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.