தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு உதவிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. இதையடுத்து அவர் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போதுவரை ஐஸ்வர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த செப்டம்பர் மாதம் திரைத்துறையில் ஏழ்மையில் இருக்கும் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி செலவிற்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் தருவதாக உறுதியளித்திருந்தார். அதோடு முதற்கட்டமாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு திரைப்பட சங்கத்திற்கு வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடலூர் மேட்டுக்குப்பம் பகுதியிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முதியோர்களுக்கு வேட்டி சட்டைகள், சேலைகளை இலவசமாக வழங்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அங்குள்ள சிறார்களுக்கு புதிய ஆடைகளை வாங்கி கொடுத்து அவர்களோடு இணைந்து பட்டாசும் வெடித்து தீபாவளியை கொண்டாடுகிறார்.