ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த கொள்ளை.. 4 ஆண்டுகளாக திருடிய பணிப்பெண் கைது !
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பணிப்பெண் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது தந்தையுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். தற்போது அவர் வீட்டில் கொள்ளை நடைபெற்றுள்ளதாக கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கடந்த மாதம் கொடுத்தார்.
அதில் என்னிடம் 60 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் பாரம்பரிய நகைகள் உள்ளன. இந்த நகைகளை கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற எனது தங்கை திருமணத்திற்கு பிறகு தனியாக நகைகளை லாக்கரில் வைத்து பராமரித்து வருகிறேன். இதை சிஐடி நகரில் குடியேறிய போது அங்கு மாற்றினேன். இப்படி அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகைகளை மாற்றியுள்ளேன்.
இந்த நகைகளின் லாக்கர் சாவியை செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள அலமாரியில் வைத்திருந்தேன். இந்த சாவி குறித்து எனது வீட்டில் பணியாற்றும் ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் அங்கு சென்று வருவது வழக்கம்.
இதையடுத்து கடந்த மாதம் நகைகளை சரிபார்த்த போது பல நகைகள் காணவில்லை. இந்த நகை விவகாரத்தில் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேர் மீது சந்தேகம் உள்ளது. அதனால் நகைகளை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வீட்டில் வேலைப்பார்த்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் அந்த பெண் தெரிவித்துள்ளார்.