“ ரேசிங் இணையதளம் அதிகாரப்பூர்வமானது அல்ல” - அஜித் தரப்பு விளக்கம்
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விரைவில் நடக்கவிருக்கும் ஐரோப்பியன் ரேஸிங்கில் பங்கேற்கவுள்ளதாக அவரது மேலாலர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். மேலும் துபாயில் கார் ஓட்டும் சோதனை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ‘அஜித்குமார் ரேஸிங்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை அஜித் உருவாக்கிய நிலையில் அணியின் சார்பாக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் என்பவர் ஐரோப்பியா சீரிஸ் 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணியின் லோகோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 கார் ஆகிய பந்தயங்களில் அஜித் மற்றும் அவரது அணி போட்டியிடுகிறது. இதில் போர்சே 992 ஜிடி3 கார் பந்தயத்திற்காக சமீபத்தில் சோதனை ஓட்டம் மேற்கொண்டார் அஜித். அப்போது அவரது ஹெல்மட் மற்றும் காரில் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை லோகோ இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
The website https://t.co/mfYJ8qfsxa is not an authorized site. Official announcements will be made through verified channels only. Kindly ignore this site.
— Suresh Chandra (@SureshChandraa) November 1, 2024
அஜித்தின் ரேசிங் குறித்து தொடர்ந்து அப்டேட் வரும் நிலையில் அவரது அணி சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் உலா வந்தன. இந்த நிலையில் அந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதல்ல என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கம் வாயிலாக தற்போது தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் அதிகாரப்பூர்வமாக இனையதளள் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை இந்த இணையதளத்தை தவிர்க்கவும் என அந்த அதிகாரப்பூர்வமற்ற இணையதள லிங்க்-கையும் பகிர்ந்துள்ளார்.