ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அஜித்குமாரின் ’விடாமுயற்சி’... விமர்சனம் இதோ..

vidamuyarchi

இரண்டு வருட காத்திருப்பிற்கு பின் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் ’விடாமுயற்சி’ இணையத்தில் பரவலான பாரட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ’விடாமுயற்சி’.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு இன்று ’விடாமுயற்சி’ உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜிகுமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் திரைப்படமாக ’விடாமுயற்சி’ உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர். இன்று காலையில் இருந்தே மேள தாளம், கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், இசை கச்சேரிகள் என தூள் கிளப்பி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். 


தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில் காலை 9 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பலர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களுக்கு சென்று 9 மணிக்கு முன்னதாகவே விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்துள்ளனர். அங்கு காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டுவிட்டது.



அதன்படி ’விடாமுயற்சி’ படத்தின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் முன்பே வெளியாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் தனியார் பக்கம் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், “சுவாரசியமான கதையும் சில நல்ல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளும் படத்தில் உள்ளன. ஆனால் படம் மிக மெதுவாக நகர்கிறது. கதை சொல்லும் விதமும் சுவாரசியமற்றதாக இருக்கிறது. படம் மிக ஸ்டைலிஷாக இருக்கிறது. அஜித் நன்றாக நடித்துள்ளார். ஆனால் முழுப்படமாக திருப்திப்படுத்தவில்லை” என பதிவிட்டுள்ளனர்.



அமெரிக்காவில் இருந்து தனது நண்பர் சொன்ன விமர்சனமாக ஒருவர் பதிவிட்டுள்ள பதிவில்,” விடாமுயற்சி திரைப்படமானது ஹாலிவுட் தரத்தில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. பின்னணி இசை மிக சிறப்பாக இருப்பதாகவும் இரண்டு வருடங்களுக்கான காத்திருப்புக்கு தகுந்த படம்” எனவும் பதிவிட்டுள்ளார்.


மற்றொரு பதிவில், ”சிறப்பான முதல் பாதியும், கொஞ்சம் சுமாரான இரண்டாம் பதியும் இருக்கிறது. இடைவேளைக் காட்சியும் அதற்கு பிறகான சண்டை காட்சிகளும் படத்தின் முக்கியமான ஹைலைட்டுகள். அஜித்குமாரை திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நல்ல திரைக்கதையுடன் கூடிய முதல் பாதியும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஆக்‌ஷன் நிறைந்த இரண்டாம் பாதியுமாக விடாமுயற்சி கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம். அனிருத்தின் இசையும் பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ்” என பதிவிட்டுள்ளனர்.



மற்றொரு விமர்சன பதிவில், “விடாமுயற்சி முழுக்க முழுக்க ஆக்சன் த்ரில்லர் படமக வந்திருக்கிறது. சுவராசியம் மிகுந்த கதைக்களத்தில் நல்ல திருப்பங்களை கொடுத்துள்ளனர். ஆனால் கதை சொல்லும் விதத்தில் மெதுவாக நகர்த்தியுள்ளனர். இயக்குநர் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை தாண்டி எங்கேயும் செல்லவில்லை. கமர்ஷியல் விசயங்கள் சுத்தமாக இல்லை. ஆனால் விறுவிறுப்பாக நகரவில்லை. படத்தின் கேமரா, கலை இயக்கம் அனைத்தும் ஸ்டைலிஷாக இருக்கிறது. அனிருத் இசையும் நன்றாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.



இன்னொரு பதிவில், ”அஜித்குமாரின் மிக நன்றாக உள்ளார். அஜித்-த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள் டல்லாக இருக்கிறது. அஜர்பைஜானின் நிலப்பரப்பை காட்டும் காட்சிகள் சிறப்பு .ஆனால், பலவீனமான கதையினால் எவ்வித உணர்ச்சிகளும் இன்றி, திருப்பங்களும் இன்றி, சுவாரஸ்யமற்று, படத்தை பார்ப்பதாக உள்ளது. படம் மிக ஸ்டைலாக இருக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.


மொத்தத்தில் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பெரிதாக வரவில்லையென்றாலும் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தியும் செய்யவில்லை என்பதே தெரிகிறது. பிரேக்டவுன் எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி என பலரும் கூறி வந்த நிலையில் படத்திற்கு வரும் கருத்துகளை வைத்து அதனை நாம் உறுதி செய்ய முடிகிறது. ஆனாலும் இரண்டு வருடங்கள் கழித்து வந்துள்ள அஜித் படம் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Share this story