மீண்டும் கார் ரேஸ்; முழூ மூச்சாக இறங்கிய அஜித்

ajith

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். பின்பு விடாமுயற்சி படம் தொடங்குவதற்கு முன் தனது பைக்கில் உலக சுற்றுலா பயணம் மேற்கொண்டார். அதில் முதற்கட்ட பயணத்தை முடித்த அவர் அடுத்தகட்ட பயணத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதையடுத்து வீனஸ் மோட்டர் சைக்கிள்ஸ் டூர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் கூட இரண்டு விலையுர்ந்த கார்களை வாங்கியிருந்தார்.


இந்த சூழலில் அஜித் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்கவுள்ளதாக அவரது நண்பர் மற்றும் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. 


இந்த நிலையில் அஜித் தரப்பில் அவர் மீண்டும் கார் ரேஸிங்கில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது எக்ஸ் பக்கத்தில் விரைவில் நடக்கவிருக்கும் யுரோப்பியன் ரேஸிங்கில் பங்கேற்கவுள்ளதாகவும் அதற்காக துபாயில் கார் ஓட்டும் சோதனை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

Share this story