புதிய அணியுடன் ஐரோப்பிய கார் பந்தயத்தில் களமிறங்கும் அஜித்... வைரலாகும் மாஸ் செல்ஃபி வீடியோ!

ajith

 நடிகர் அஜித்குமார் தனது புதிய கார் பந்தய அணியுடன் எதிர்வரும் ஐரோப்பிய கார் பந்தய சீசனில் கலந்து கொள்ளவுள்ளதாக சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.பிரபல நடிகர் அஜித்குமார் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். வெளிநாடுகளில் செல்லும் போது படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட பைக் மற்றும் கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார். இந்தளவு கார் பந்தயத்தில் விருப்பம் ஏற்பட சினிமாத்துறையில் வருவதற்கு முன்பு அஜித் மெக்கானிக்காக பணியாற்றியது கூட காரணமாக இருக்கலாம்.

அஜித் சமீபத்தில் வாங்கிய ஆடி காரில் 234 கி.மீ வேகத்தில் சென்று அதனை வீடியோவாக வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார். மேலும் இந்தியாவில் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக அறியப்படும் அஜித்குமார், சில வருடங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைகழகம் வானூர்தி துறை மாணவர்களுடன் இணைந்து ’தக்‌ஷா’ என்ற ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டார்.அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு துபாய் ஏர்டோம் என்ற கார் ரேஸில் 220 கி.மீ வேகத்தில் அஜித்குமார் கார் ஒட்டிய வீடியோவை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், "துபாய் ஆட்டோட்ரோமில் அஜித்குமார் ஃபெராரி 488 EVO காரில் டெஸ்டிங்கில் ஈடுபட்டார். அஜித்குமார் ஐரோப்பா கார் பந்தய சீசனுக்கு தயாராகி வருகிறார்" என பதிவிட்டுள்ளார்.



மேலும் சுரேஷ் சந்திராவின் மற்றொரு பதிவில், “அஜித்குமார் ரேஸிங் அணி உருவாக்கியுள்ளதை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம். அஜித்குமார் முன்பு 2004 Formula Asia BMW F3 Championship மற்றும் 2010 Formula 2 Championship ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். புதிதாக உருவாக்காப்பட்டுள்ள பந்தய அணிக்கு ஃபேபியன் என்பவர் கார் ஓட்டுநராக இருப்பார். புதிய ரேஸிங் அணி ஐரோப்பிய தொடரில் பங்கேற்கும்” என தெரிவித்துள்ளார்.



மேலும் கார் பந்தயத்திற்கு அஜித் தயாராவது போல் புதிய ஸ்டைலிஷான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அஜித்குமார் ரேஸ் பைக் பின்னணியில் புதிய செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் இறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this story