அஜித்தின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் உறுதி!

good bad ugly

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதில் ’விடாமுயற்சி’ படத்தில் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு சுமார் 50% வரை முடிவுற்று இருக்கிறது. முதலில் ‘விடாமுயற்சி’ படமே வெளியாக இருக்கிறது. அதன் படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதலில் தீபாவளிக்கு வெளியிட படக்குழு முயற்சித்தது. தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்கள். 

‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வெளியானால், முன்பே பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ படத்தை வெளியிட சாத்தியமில்லை. இதனால் ‘குட் பேட் அக்லி’ படத்தினை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ‘விடாமுயற்சி’ வெளியீடு உறுதியானவுடன், ‘குட் பேட் அக்லி’ வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டுள்ளது.

Share this story