“அமரன் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” - எஸ்.ஜே.சூர்யா பாராட்டு

sj suryah

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது இயக்குநர்கள் அட்லீ, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.  


இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா அமரன் படத்தை பாராட்டியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,  “அமரன் ஒரு சிறப்பான படம். கமல்ஹாசன், ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். நான் மதுரையில் படப்பிடிப்பில் இருந்தேன். படம் பார்க்க சிறிது நேரம் கிடைத்தது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share this story