“ அமரன் " ஜெய் பீம் படத்திற்கு பிறகு மற்றொரு கிளாசிக் திரைப்படம் - ஜோதிகா பாராட்டு
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தை சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் பார்த்துள்ளனர். இது தொடர்பாக ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அமரன் படக்குழுவினருக்கு ஒரு சல்யூட். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்ன ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். ஜெய் பீம் படத்திற்கு பிறகு மற்றுமொரு கிளாசிக் படம். சிவகார்த்திகேயன் இக்கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்ததை நினைத்துப் பார்க்க முடிகிறது. சாய் பல்லவி என்னவொரு நடிகை? கடைசி 10 நிமிடங்களில் என் இதயத்தைப் உலுக்கிவிட்டீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும் நேர்மறையான எண்ணமும் எங்களின் இதயங்களைத் தொட்டுவிட்டது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்; உங்களைப்போன்ற வீரமும் தைரியமும் கொண்டவர்களாகவே எங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை தவறவீடாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்