அமரன்; சீமான் வாழ்த்துக்கு சிவகார்த்திகேயன் நன்றி...!
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது இயக்குநர்கள் அட்லீ, அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் படம் பார்த்து சீமான் பேசிய வீடியோவை தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சீமான், “கடைசி 20 நிமிடம் இதயத்தை இறுக வைக்கிறது. அதில் இருந்து யாராலும் மீள முடியாது. இராணுவ வீரராக நடிப்பதற்கு என் தம்பி சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. முகுந்தனாகவே அவரை பார்தேன், அவ்வளவு சிறப்பான நடிப்பு. தம்பி ராஜ்குமார் பெரியசாமி, இவருக்குள் இவ்வளவு அசாத்திய திறமை இருக்கிறதா என வியக்க வைக்கிறார். சிறு குறை கூட சொல்ல முடியாதளவிற்கு மிகச்சிறந்த படைப்பு.
நேற்று படம் முடிந்து 2 மணி நேரம் எங்களோடு உரையாடி அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் தந்ததற்கு நன்றி @Seeman4TN அண்ணன் 🙏❤️ https://t.co/sqDb8ZHSnh
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 4, 2024
சாய்பல்லவி சாதாரணமாகவே ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் நடிப்பாங்க. இதில் இவ்வளவு கணமான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். என் அண்ணன் கமல்ஹாசன் எத்தனையோ படங்களை தயாரித்து இயக்கி நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் தயாரித்த ஆகச்சிறந்த படைப்புகளில் அமரனும் ஒன்று. அவர் இந்த நாட்டு இராணுவ வீரருக்கு அர்பணித்த படமாகத் தான் இதை பார்க்கிறேன்” என்றார். பின்பு தொலைபேசி வாயிலாக கமலிடம் பேசி தனது வாழ்த்துக்களை கூறினார். இதையடுத்து சீமானுக்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில், “நேற்று படம் முடிந்து 2 மணி நேரம் எங்களோடு உரையாடி அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் தந்ததற்கு நன்றி சீமான் அண்ணன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.