பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள 'அமரன்' வெற்றிவிழா !
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த மனைவி ரெபெகாவாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் காதல் வாழ்க்கை குறித்தும், ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ள 'அமரன்' திரைப்படம் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. சிவகார்த்திகேயன் திரை வாழ்வில் மிகப் பெரிய வெற்றியை இப்படம் பெற்றுள்ளது.
’அமரன்’ திரைப்படம் இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் வேட்டையனை பின்னுக்கு தள்ளி வசூலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் அமரன் படத்தின் வெற்றி விழாவை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக வெற்றி விழா நடத்த ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அமரன் படக்குழுவினருக்கு கேடயம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிக்க தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில் அவர் இந்தியா வந்தவுடன் அமரன் திரைப்பட வெற்றி விழா வேலைகளில் ஈடுபடுவார் என தெரிகிறது. மேலும் டிசம்பர் 12ஆம் தேதி அமரன் திரைப்பட வெற்றி விழா நடைபெறும் பட்சத்தில் அன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், வெற்றி விழா குறித்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.