“சமூகநீதியின் கருப்பு வரலாறு” - நந்தன் படம் குறித்து அன்புமணி

anbumani

சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை பேசியிருக்கின்றனர். 

இப்படத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன், இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இப்படம் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கி நடிகர் சசிகுமார் நடித்த நந்தன் திரைப்படம் பார்த்தேன். உள்ளாட்சிகளின் வாயிலை நந்தன்களுக்கு சட்டம் திறந்து விட்டாலும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் மூடி விடுகின்றனர் என்ற சமூகநீதியின் கருப்பு வரலாற்றைத் தான் நந்தன் திரைப்படம் பேசுகிறது. உள்ளாட்சிகளில் பட்டியலினத்தவருக்கான உரிமைகளை அரசும், சமூகமும் உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

இவரது கருத்துக்கு பதிலளித்துள்ள இரா.சரவணன், “உள்ளாட்சி அரசியலில் சமூகநீதியின் அவலத்தைச் சொல்லும் ‘நந்தன்’ படத்திற்கு உங்களின் பாராட்டு மகத்தானது; நம்பிக்கையானது. ‘நந்தன்’ முன்வைத்திருக்கும் பிரச்சனையை உங்களின் கருத்து, மிகப்பெரிய விவாதமாக்கி இருக்கிறது. இது விடியலை நோக்கி நகர்ந்தால், அதில் உங்களின் பங்களிப்பு முக்கியமானது. ‘நந்தன்’ படத்தை தேர்ந்தெடுத்து பார்த்ததற்கும், கருத்து தெரிவித்ததற்கும் மனமார்ந்த நன்றி” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story