தமிழக அரசியல் குறித்து ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்து!

pawan kalyan

தமிழகத்தில் யார் அரசுக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.


ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இன்று வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற அவர் மூலவர் முருகர், உற்சவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தெட்சிணாமூர்த்தி , சத்ரு சம்ஹார மூர்த்தி உட்பட பரிவார தெய்வங்களை வணங்கினார். தொடர்ந்து வெளியே வந்த அவருக்கு இலை விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து அவருடன் நின்று கோவில் பணியாளர்களும், அர்ச்சகர்களும் புகைப்படமும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.


இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், "ஆன்மிக சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்துள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள இன்னும் நான்கு கோயில்களில் வழிப்பாடு செய்ய உள்ளேன். தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.15 வருடங்களுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் தரிசனம் மேற்கொண்டிருக்கின்றேன். அரசியலுக்கு வந்த பின்னர், பல்வேறு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் கோயில்களுக்கு வர முடியவில்லை. இன்றைக்கு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தவெக தலைவர் விஜய் அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் ஏற்கெனவே வரவேற்பு தெரிவித்துள்ளேன். அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளேன். தமிழ்நாட்டு அரசியல் களத்துக்கு யார் வந்தாலும் அதனை நான் வரவேற்கிறேன். ஆனால், அப்படி அரசியலுக்கு வருபவர்கள் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுதான் எனது மிகப்பெரிய சந்தோசம்,"என்று கூறினார்.

Share this story