மீண்டும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

மீண்டும் தெலுங்கு படம் ஒன்றின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலி கான், ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தேவரா’. அனிருத் இசையமைத்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் முதலீட்டை எடுக்குமா என்பது கேள்விக்குறி தான் என பலரும் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, ‘தேவரா’ படத்தினை காப்பாற்றியது அனிருத் இசை மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பு ஆகியவை மட்டுமே என்று பலரும் குறிப்பிட்டார்கள். இதனால் தமிழ், இந்தி ஆகிய மொழிகளைத் தொடர்ந்து தெலுங்கிலும் அனிருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் தங்களுடைய படத்துக்கு இசையமைக்க வேண்டும் என அணுகத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால், பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருவதால் இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று நழுவி வருகிறார் அனிருத். அதே நேரத்தில் ஒரே ஒரு தெலுங்கு படத்தை மட்டும் ஒப்புக் கொண்டுள்ளார் அனிருத். ‘தசரா’ படத்தின் இணையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா - நானி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளனர். இதற்கு அனிருத் தான் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதியில் தான் வெளியீடு இருக்கும் என்பதால் ஒப்புக் கொண்டுள்ளார் அனிருத். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படத்தினைத் தொடர்ந்து, நானி படத்துக்கு அவர் இசையமைக்கவுள்ளார்.