ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு மீண்டும் இணைய முடிவு ?
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு கடந்த 19-ம் தேதி அவரை பிரிவதாகக் கூறி விவாகரத்து முடிவை அறிவித்திருந்தார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதை ஏ.ஆர்.ரஹ்மானும் உறுதி செய்திருந்தார். இதற்கிடையே இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “ இருவரின் விவாகரத்துக்குப் பிறகு பிள்ளைகள், யாருடன் இருப்பார்கள் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அவர்கள் வளர்ந்துவிட்டதால் முடிவெடுக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு வெளியிட்ட கூட்டு அறிக்கையில், பிரிவின் வலியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த முடிவை எடுக்கும் முன் அவர்கள் நிறைய யோசித்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படாது என்று ஒருபோதும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
விவாகரத்து பிரச்சினையில் ஜீவனாம்சம் குறித்துப் பேசப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்ற வந்தனா ஷா, சாய்ரா பண ஆசை கொண்டவரல்ல என்றும் தெரிவித்துள்ளார்.