ஏ.ஆர் ரஹ்மான் விவாகரத்து தொடர்பான அவதூறு.. 2 ஆண்டுகள் சிறை தண்டனை என எச்சரிக்கை...

ARR

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் 1995அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 30ஆண்டுகளை நெருங்கும் வேளையில், சாய்ரா பானு ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாக அவர் தெரிவித்திருந்தார். இவரது முடிவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பின்பு ஏ.ஆர் ரஹ்மானும், “எங்களது திருமண பந்தம் 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்றுவிட்டது” என தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். இவர்களுக்கு கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோகினி டே என்பவர் அவரது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதனால் ஏ.ஆர் ரஹ்மான் பிரிவையும் இவரது பிரிவையும் தொடர்ப்பு படுத்தி பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், அதற்கும் இதற்கும் எந்த சம்மதமும் இல்லை என விளக்கமளித்திருந்தார். இதையடுத்து ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன், தனது தந்தை பிரிவு குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்திருந்தார். arr

இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் சார்பில் அவரது திருமண பிரிவு குறித்து அவதூறு கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும் அதை நீக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஹ்மானின் வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டிஸில், “ஏ.ஆர் ரஹ்மான் திருமண பிரிவு குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் கட்டுரைகள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏ.ஆர் ரஹ்மான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையில் வெளியிட்ட பதிவுகளையும் சில கற்பனையில் அளித்த பேட்டிகளையும் நீக்க வேண்டும்” என சம்மந்தப்பட்ட யூட்யூப் பதிவர்களுக்கும் சமூக வலைதளங்களுக்கும் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு சம்மந்தப்பட்ட வீடியோக்கள், பதிவுகள் நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story